மற்றவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்கும் நீங்கள், இளகிய மனதால் சில நேரங்களில் ஏமாறுவீர்கள். குருபகவான் 9ம் வீட்டில் நின்று உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும்.
தன்னம்பிக்கையும் பிறக்கும். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். பிரச்னைகளை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும்.
உங்கள் ராசிநாதனான புதன் இந்த மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு வலுவடைவதால் உங்களுக்கு சோர்வு, களைப்பு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல்களும் விலகும். சூரியன், செவ்வாய், கேது, சுக்கிரன் என நான்கு கிரகங்கள் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அடுக்கடுக்காக செலவுகள் இருக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கைமாற்றாக கொஞ்சம் கடனும் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
பயணங்களின்போது கவனம் தேவை. சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பாதச்சனி நடைபெறுவதால் முழங்கால், கணுக்காலில் வலிக்கும். தொண்டைப் புகைச்சல், காது வலி, மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் வந்து நீங்கும். 5ந் தேதி முதல் உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் ஓரளவு நிம்மதி உண்டு. கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் சரியாகும். கல்யாணப் பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடியும். தீர விசாரிப்பது நல்லது.
அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும்.
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.
மாணவர்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். விளையாடும்போது காயங்கள் ஏற்படக் கூடும்.
வியாபாரத்தில் நஷ்டங்களும் ஏமாற்றங்களும் இருக்கும். வேலையாட்களாலும் பிரச்னைகள் வரும். வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை வரும். பங்குதாரருடன் சின்னச் சின்ன மோதல்கள் இருக்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் எதையும் செய்ய வேண்டாம். அரசாங்க பகை வந்து நீங்கும்.
உத்தியோகத்தில் பொறுமையாக இருங்கள். அதிகாரிகள் ஏதேனும் குறை கூறினாலும் அதை பொருட்படுத்த வேண்டாம். எதிர்ப்புகள், இடமாற்றங்கள் இருக்கும்.
கலைத்துறையினரே! புது நிறுவனங்களை நம்ப வேண்டாம்.
விவசாயிகளே! விளைச்சல் மந்தமாக இருக்கும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். முற்பகுதி இடையூறுகளை தந்தாலும் பிற்பகுதியில் இனிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
ஏப்ரல் 15, 16, 17, 18, 19, 20, 26, 28, 29, 30, மே 4, 6, 7, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 8, 9 மற்றும் 10ந் தேதி மாலை 3:15 மணி வரை புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.
பரிகாரம்:
அருகிலுள்ள ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு நீர்மோரோ பானகமோ கொடுங்கள்.
1 comments:
ENUDAYA RASY KANNY. NATCHATHIRAM ATHAM. INGU KOORIYA PALAN UNMAI.
Post a Comment