ஆனி மாத ராசி பலன்கள் - மிதுனம்

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், இங்கிதமான பேச்சால் மற்றவர்களின் மனதில் எளிதில் இடம்  பிடிப்பீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமர்ந்து ஜென்ம குரு நடைபெறுவதாலும்
ராசிக்குள்ளேயே சூரியன் நுழைந்திருப்பதாலும் இந்த மாதம்  முழுக்க வேலைச்சுமை இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். தலைச்சுற்றல், படபடப்பு, ரத்த அழுத்தம் அதிகமாகுதல், வாயுத்  தொந்தரவால் நெஞ்சுவலி வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் புதன் ராசிக்குள்ளேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் ஜென்ம குருவாலும் சூரியனாலும்  ஏற்படும் பாதிப்புகள் குறையும். சித்த வைத்தியம் மூலமாக உங்களுக்கு ஆரோக்யம் சீராகும்.

புதன் வலுவாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன்  சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். 3ந் தேதி வரை செவ்வாய் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் சகோதர  வகையில் அலைச்சல் இருக்கும். 4ந் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நுழைவதால் கோபப்படுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள்  வந்து செல்லும். சனியும் ராகுவும் 5ம் வீட்டில் தொடர்வதால் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். எடைமிகுந்த பொருட்களை தூக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! எதிர்க் கட்சியினரை  வரம்புமீறி பேச வேண்டாம். உங்கள் கட்சித் தலைமையையும் செயற்கையாக புகழ்ந்து கொண்டிருக்க வேண்டாம். மாணவர்களே! உயர்கல்வி  விஷயத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கன்னிப் பெண்களே! உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து இந்த மாதத்தில் விடுபடுவீர்கள். கேது லாப  வீட்டில் தொடர்வதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. பழைய பாக்கிகளை  போராடி வசூலிக்க வேண்டியது வரும். பழம், காய்கறி, கட்டிட உதிரி பாகங்கள், வாகனம் மூலமாக லாபம் அதிகரிக்கும்.

பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும். சக ஊழியர்களின் விடுப்பால்  கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். விவசாயிகளே!  வரப்புச் சண்டையை பெரிதாக்காதீர்கள். தோட்டப் பயிர் லாபம் தரும். தன் பலவீனங்களை சரி செய்து கொள்ள வேண்டிய மாதமிது.  

ராசியான தேதிகள்: ஜூன் 15, 16, 17, 21, 22, 24, 30, ஜூலை 1, 2, 3, 10, 11, 12, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 25, 26, 27ந் தேதி காலை 9:30 மணி வரை  முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

பரிகாரம்: வேலூர்-சேண்பாக்கத்தில் அருளும் பதினோரு விநாயகர்களை தரிசியுங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment