சித்திரை மாத ராசி பலன்கள் - மீனம்


மனதில் பட்டதை பளிச்சென்று பேசி உண்மைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நீங்கள், சில சமயங்களில் பலருக்கு எதிரியாகவே  தெரிவீர்கள். கடந்த ஒருமாத காலமாக ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை
கோபப்பட வைத்த, உணர்ச்சிவசப்பட்டு பேச வைத்த சூரியபகவான்  இப்போது ராசிக்கு 2ல் அமர்ந்திருப்பதால் கோபம், வேலைச்சுமை குறையும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.

தடைப்பட்ட அரசுக்  காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். நல்ல உறக்கம் வரும். ஆனால், கண், காது மற்றும் பல்வலி வந்துபோகும். உங்கள் தன-பாக்யாதிபதியான  செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்திருந்த பணம் வரும். ஏமாற்றங்கள் குறையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.

உங்களின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்ளாமல் இருந்த சகோதர, சகோதரிகள் முழுமையாக புரிந்து கொள்வார்கள்.  சகோதரிக்கு திருமணம் முடியும். உங்கள் ராசிநாதன் குரு 3ல் நிற்பதால் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும்.

அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும்.

மாணவர்களே! அலட்சியமாக இருக்காதீர்கள். நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழு நேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

கன்னிப்பெண்களே! மாதவிடாய்க் கோளாறு, தோலில் இருந்து வந்த நமைச்சல், தலை வலி யாவும் நீங்கும். ஆரோக்கியம், அழகு, இளமைக் கூடும். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார்.

வியாபாரத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதம் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். புதிய சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். விளம்பர யுக்திகளையும் கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது  ஏஜென்சி எடுப்பீர்கள். போட்டிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில் இந்த மாதம் வேலைச்சுமை குறையும்.  சம்பளபாக்கி கைக்கு  வரும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். அஷ்டமத்துச்சனி நடைபெறுவதாலும் 8ல் ராகு தொடர்வதாலும்  உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் தவறான வழியில் சம்பாதிக்க தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள்.

கலைத்துறையினரே! உங்களின்  புதுமுயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும்.

விவசாயிகளே! பூச்சித்தொல்லை குறையும். வங்கிக் கடனை பைசல் செய்வதுபற்றி  அவ்வப்போது யோசிப்பீர்கள். மன இறுக்கம் நீங்கி மகிழ்ச்சி தங்கும் மாதமிது.    

ராசியான தேதிகள்:

ஏப்ரல் 14, 15, 17, 21, 22, 23, 24, 30, மே 1, 2, 3, 4, 5, 9, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஏப்ரல் 25, 26 மற்றும் 27ந் தேதி காலை 9 மணி வரை எதிலும் நிதானித்து செயல்படுங்கள்.
   
பரிகாரம்:

சென்னை-பாரிமுனை அருகில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். உங்கள் வீட்டு வாசலில் ஒரு பானையில் தண்ணீர்  ஊற்றி வைத்து வழிப்போக்கர்களின் தாகம் தீர உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment