எந்த வேலையையும் உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! கடந்த ஒன்றரை மாதங்களாக 12ம் வீட்டில் மறைந்திருந்த உங்கள் ராசிநாதனான செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்குள் ஆட்சிபெற்று
அமர்ந்திருப்பதால் அலைச்சல் குறையும். தடைப்பட்ட காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். குழப்பமான விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். சகோதரருக்கு வேலை கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத் திரப்பதிவு செய்வீர்கள்.
கால் வலி, கழுத்து வலி, மூட்டு வலி என்று எப்போதும் மருந்தும் மாத்திரையுமாகவே இருந்தீர்களே! அந்த வலியெல்லாம் இந்த மாதத்தில் படிப்படியாக குறையும். வெளிநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். உங்களின் தனாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்தவர்களெல்லாம் ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு மாறுவீர்கள்.
உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உங்கள் ராசிக்குள்ளேயே சூரியனும் கேதுவும் நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி, தொண்டைப் புகைச்சல் வந்துபோகும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். 7ம் வீட்டில் சனியும் ராகுவும் நிற்பதால் அவ்வப்போது சோர்வும் களைப்பும் அடைவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். பயணத்தின்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். தங்க ஆபரணங்களை கவனமாகக் கையாளுங்கள்.
அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டியது வரும்.
கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். புது வேலை கிடைக்கும்.
மாணவர்களே! பழைய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். குரு 2ல் நீடிப்பதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், அழகு சாதனப் பொருட்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புதிய சலுகைகள் கிட்டும். சக ஊழியர்களுக்காக வாதாடி சில சலுகைகளை அவர்களுக்கு பெற்றுத் தருவீர்கள்.
கலைத்துறையினரே! பரிசும் பாராட்டுகளும் குவியும்.
விவசாயிகளே! ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். புதிதாக நிலத்தை கிரயம் செய்வீர்கள்.
ராசியான தேதிகள்:
ஏப்ரல் 14, 15, 17, 23, 24, 25, 26, மே 2, 3, 4, 5, 11, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
27ந் தேதி காலை 9 மணி முதல் 28 மற்றும் 29ந் தேதி நண்பகல் 12 மணி வரை வேலைச்சுமை அதிகரிக்கும்.
பரிகாரம்:
சென்னை-பூவிருந்தவல்லியில் அமைந்திருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment