மேஷம்: சரியோ, தவறோ, எதையும் நேரடியாக சொல்லும் திறந்த மனசுக்காரர்கள் நீங்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்துகொண்டு, சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருந்த உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இப்போது 10ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்ததால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகனுக்கு நல்ல மணமகள் அமைவார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். சிலருக்கு புதுவேலை கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். மிகப்பெரிய பதவி வகிப்பவர்கள் அறிமுகமாவார்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். ஏற்கனவே முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த வீடு, மனை, சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். உங்களின் தனாதிபதியான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் திருப்தி தரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.
குருபகவான் 2ல் தொடர்வதால் தந்தைவழிச் சொத்து வந்து சேரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். ஆனாலும் ராசிக்குள்ளேயே கேது நிற்பதாலும் உங்கள் ராசியை சனி பார்த்துக் கொண்டிருப்பதாலும் சிறுநீர்த் தொற்று, பல்வலி, கழுத்து வலி வரக்கூடும். கண்டகச் சனி நடைபெறுவதால் உறவினர்களால் கணவன்-மனைவிக்குள் வீண் சண்டை, சச்சரவுகள், சந்தேகத்தால் பிரச்னைகள் என ஏற்படக்கூடும். 7ம் வீட்டில் ராகு இருப்பதால் விலை உயர்ந்த பொருட்கள் களவுபோக வாய்ப்பிருக்கிறது; எச்சரிக்கை.
அரசியல்வாதிகளே, பெரிய பதவிகள் தேடி வரும். கன்னிப் பெண்களே, புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
மாணவர்களே, கூடுதல் நேரம் ஒதுக்கி படித்து நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் மோதல்கள் இருக்கும். பதிப்பகம், மருந்து, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.
கலைத்துறையினரே, உங்களின் படைப்புத் திறன் வளரும்.
விவசாயிகளே, ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கரும்பு, மஞ்சள் வகைகளால் லாபமடைவீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்களும் பணவரவும் அதிகரிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
ஜனவரி 14, 15, 22, 23, 26, 31,பிப்ரவரி 1, 2, 3, 8, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 4ந் தேதி காலை 8:30 மணி முதல் 5, 6ந் தேதி காலை 11:30 மணி வரை வேலைச் சுமையால் சோர்வாகக் காணப்படுவீர்கள்.
பரிகாரம்:
சென்னை-செங்குன்றத்திற்கு அருகேயுள்ள ஞாயிறு தலத்தில் அருளும் புஷ்பரதேஸ்வரரை வணங்கி வாருங்கள். கண் பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment