கன்னி ராசி 2013 | கன்னி ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் கன்னி


கன்னி :

உத்திரம்(2,3&4); அஸ்தம்; சித்திரை (1&2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.


[சாதகமான காலம்:- குரு பகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் 31.1.2013 முதல் 26.5.2013 வரை; மற்றும்  குருவின் வக்கிர சஞ்சார காலமான 8.11.2013 முதல் ஆண்டின் இறுதி வரை

சாதகமற்ற காலம்:-- குருவின் வக்கிர சஞ்சார காலமான  ஆண்டின் துவக்கம் முதல் 30.1.2013 வரை மற்றும் குருவின் 10-மிட சஞ்சார காலமான 27.5.2013 முதல் 7.11. 2013 வரை. மற்றும் சனி, ராகு கேது சஞ்சாரங்களும் சரியில்லை.]

இந்த ஆண்டு ,குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். ஆனால், ஆண்டின் தொடக்கத்தில்  ஜனவரி 1-ம் தேதி முதல், மாதக் கடைசியான 30-ம் தேதிவரை  குருபகவானின் வக்கிர சஞ்சாரத்தினால், நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை.

இது  தவிர, மே மாதம் 27-ம் தேதியிலிருந்து நவம்பர் மாதம் 7-ம் தேதிவரை  குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்குப் பெயர்ந்து சாதகமற்ற நிலையிலும் நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு ஆண்டின் இறுதிவரை சாதகமான நிலையிலும் சஞ்சரிக்கப் போகிறார்.

இப்போது  நீங்கள் ஏழரைச்சனியின் இறுதிப் பகுதியில் இருக்கிறீர்கள். இதனை  போகிற போக்கில் இருக்கும்  ‘ பாதசனி ‘என்பார்கள். ஆனால் இந்த சனி உங்களுக்கு மிகவும் சீரியஸான சிரமங்களைத் தராது. இந்த முறை சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான துலா ராசியில் உச்ச சனியாக சஞ்சரிப்பதால், சனியினால் ஏற்படும் தீமைகள் பெருமளவு குறையும் வாய்ப்பும் உள்ளதால் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை . ஆனாலும் இந்த சஞ்சாரம் சில தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுக்கத் தவறாது.

மேலே குறிப்பிட்ட   சஞ்சாரங்களைத் தவிர ,சர்ப்பக் கிரகங்களான ராகுவும்  கேதுவும் உங்கள் ராசிக்கு 2மற்றும் 8-மிடங்களிலும்  சஞ்சரிக்கிறார்கள்.  இந்த கிரகங்களும்  நன்மைகள் தர வழியில்லை.

இனி ஒவ்வொரு சஞ்சாரங்களின் மூலம் விளையும் பலன்களைப் பார்க்கலாம்.

ஆண்டின் துவக்கம் முதல் 30.1.2013 வரை குரு வக்கிர சஞ்சாரம் செய்வதால், உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை. கிரக சஞ்சாரங்கள் சரியில்லை. பலவகையில் படுத்தல்கள் இருக்கும். உடல் நலத்திலும் ஏதாவது பிரச்சினை வந்தவண்ணம் இருக்கும். மருத்துவச் செலவுகளும் வரும். எல்லா விஷயங்களிலும் மந்தமான போக்கே காணப்படும். குழப்பமான மனநிலை நீடிக்கும். எந்த விஷயத்தைத் தொட்டாலும் அது ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகும். தேவையற்ற சிக்கல்கள் ,வீண் பிரச்சினைகள் வீண் வம்புகள் வீடு தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் தள்ளிப் போகும். மனக் கஷ்டத்துக்கும் டென்ஷனுக்கும் ஆளாவீர்கள். இவ்விதமான கஷ்டங்கள்  ஒரு மாதம்தான் என்பதால் அனைத்து முக்கிய விஷயங்களையும் தள்ளிப் போடுங்கள்.

ஏற்கெனவே சொல்லியபடி,  ஜனவரி மாதம்   31-ம் தேதி முதல் மே மாதம்  26-ம் தேதி  வரையிலும் குருபகவான் உங்களுக்கு நன்மை தரும்  ஸ்தானமான 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள் நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.

குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை, வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை செய்து மன நிறைவைப் பெறுவீர்கள்.  இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார்.  நீங்கள் எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

ஆண்டின் இறுதியில், நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல் ஆண்டின் இறுதிவரை  10-ம் இடத்திலிருக்கும் குருபகவான் வக்கிர கதியில் சஞ்சப்பதால்,   9-ம் இடத்தில் இருந்தபோது  அளித்த நற்பலன்களைப் போலவே,  நற்பலன்கள் நிகழும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் ,பணி உயர்வு ,உத்தியோக உயர்வு பெறுவார்கள். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். இப்படியாக குருபகவான் தரக்கூடிய நற்பலன்கள் யாவுமே நல்லவிதமாக  நிகழும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.  பண வரவு  ஏற்படும். நிதி உதவி  பல வழிகளிலிருந்தும் கிடைக்கும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

அடுத்தபடியாக சனிபகவானின் சஞ்சாரத்தைப் பார்க்கும்போது,  நீங்கள் ஏழரைச் சனியின் பிடியில் இருந்தாலும், சனி  துலாம் ராசியில் இருந்தபடி உச்சம் பெற்று உங்கள்  ராசிக்கு 4-ம் இடத்தையும் , 8,11-ஆகிய இடங்களையும்  பார்க்கிறார். இதன்  மூலம்  வசதி வாய்ப்புகள் குறைய வாய்ப்புண்டு. வீடு, வாகனங்கள் மூலம்  ரிப்பேர் செலவு வரும் .  வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் அந்த வேலையைப்  பண நெருக்கடியினாலோ, அல்லது தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மையாலோ பாதியில் நிறுத்தவேண்டி  நேரும். உடம்புக்கு அவ்வப்போது ஏதாவது படுத்தும். எதிரிகளின் ஆபத்துகளிலிருந்தும்  ஒதுங்கியிருப்பது நல்லது. உங்கள் பதவிக்கு ஏதாவது ஆபத்து நேரலாம். பணியிடங்களில் கவனம் தேவை. மனக்கவலை சிலருக்கு  அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால், மன அழுத்தம் ஏற்படலாம்.   தொழில், வியாபாரத்தில் லாபம் இருக்காது. பூர்வீகச் சொத்தில் இழுபறி  நீடிக்கும். அரசுக் கொள்கை காரணமாகவோ, அல்லது ஏதாவது தண்டனை மூலமாகவோ உங்கள் சம்பளம் குறையலாம். கைக்கு வரும் பண வழிகள் அடைபடும்.

சனியின் பார்வை பலன்களைத் தவிர சனியின் 2-மிட சஞ்சாரம் குடும்பத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்  நிலவும். அடக்கி வாசித்தால்  மட்டுமே நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பலாம்.   குடும்பச் செலவுகளுக்குத் தேவையான வருமானமும் பற்றாக்குறையாவதால், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய், அதன்மூலம் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். இரண்டாமிடம் வாக்கு ஸ்தானமும் ஆவதால், பேச்சில் நிதானம் தேவை. இல்லாவிட்டால், வாய்த் தகறாறு முற்றி பிரச்சினைகள் பெரிதாகலாம். உங்கள் பக்கம் இருக்கும் நியாயமும்கூட எடுபடாது. எனவே நியாயத்தைக்கூட எடுத்துச் சொல்ல முடியாத சந்தர்ப்பங்களில் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது.  இரண்டாமிடமான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி பகவான், தொழில் பெருக்கத்துக்கு உதவ மாட்டார். தொழில் மந்தமாக இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவும் முடியாது. தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்காமல் போவதும் நடக்கும். எனவே முன்னேற்றத் திட்டங்களை அமுல்படுத்த முடியாது. வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல், வியாபாரத்தையே மூடிவிட்டு வேறு வேலை தேடலாமா என்றும் சிலருக்கு யோசனை தோன்றும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை வழிபட்டு அவருடைய அருளைப் பெற முயன்றால், துன்பங்கள்  நீங்கும்.

ராகு கேதுக்களின் சஞ்சாரங்களும் நன்மை தர வழியில்லை.

ஆனால், மிகவும் ஆறுதல் தரும் விதமாக ,இறுதியில் நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல் ஆண்டின் இறுதிவரை  10-மிட குரு வக்கிரம் பெற்று உங்களுக்கு நற்பலன்களாக வாறி வழங்கும் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும்.  ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து  எலுமிச்சம்பழ விளக்கேற்றி வணங்கவும்.  கருப்பு உளுந்தை தானம் செய்யவும்.  கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்,வினாயகரை வழிபடவும்.   வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்வதும் நல்லது.  கொள்ளு தானம் செய்யவும். ஏழரைச் சனியின் சஞ்சாரம்  நடைபெறுவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபட்டால், துன்பம் அகலும்.  தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். உடல் ஊனமுற்றோருக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்யவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். துன்பங்கள் தீர்ந்து சுபம் பெருகும்.

புத்தாண்டில் இனிதே வாழ வாழ்த்துக்கள்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

invite friends said...

good

Post a Comment